Friday, January 29, 2010

சிந்தனைக்கு சில...!

பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

Saturday, January 23, 2010

ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்த் மாநாடு

திருச்சியில் ஜனவரி 30, 31ந் தேதிகளில் ஜமாத்-ஏ-இஸ்லாமியின் தமிழ் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டை அனைத்து இந்திய தலைவர ஜலாலுத்தீன் உமரி தொடங்கி வைக்கப்போவதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதனையொட்டி ஒரு பெரும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30,000 பேர் இதில் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, January 21, 2010

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!



1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

சிந்தனையில் மோரிஸ் புகை!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்"

(அல்-குர்ஆன் 10: 92)


இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!

கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (அல்-குர்ஆன் 10:92)

Source : http://www.irudithoodu.blogspot.com/

Wednesday, January 20, 2010

உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமிய வங்கி!

மக்களின் சுபிட்சமான உலக வாழ்வுக்குப் பொருளாதாரம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. கல்வி, தொழில் துவங்கி அடிப்படை தேவைகள் அனைத்துக்கும் பொருளாதாரம் அடிப்படை ஆதாரமாகும். அத்தகைய பொருளாதாரத்தின் வளர்ச்சி, நேர்மையான-நியாயமான வழிமுறைகளின் அடிப்படையில் இல்லாத போது, அதுவே எதிர்மறை விளைவுகளையும் தோற்றுவித்து விடுகிறது.



இன்று உலகப் பொருளாதாரம் முழுமையும் நேர்மை-நியாயமற்ற "வட்டி"யின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு விட்டது. இதனால் எழுந்த எதிர்மறை விளைவு, செல்வம் படைத்தவர்களை மேலும் செல்வந்தர்களாகவும் ஏழைகளைப் பஞ்சப் பரதேசிகளாகவும் ஆக்கி விட்டது. ஏழை மக்கள் பாதிக்கப்படுவதால் என்றுமே அதிகார, துஷ்பிரயோக அரசுகள் அசைந்து கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால், இந்தக் கொடும் வட்டி, சமீப காலத்தில் அதிகார, பணபல வர்க்கத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

அதன் பின்னரே, வட்டியினால் விளையும் தீமையினைக் குறித்தும் வட்டியில்லாத ஒரு மாற்று பொருளாதார கட்டமைப்பினைக் குறித்தும் அதிகார, பணபல வர்க்கங்கள் சிறிதாக சிந்திக்கத் துவங்கியுள்ளன.

உலக மக்களின் சுபிட்சமான வாழ்வுக்குரிய வழிமுறைகளை வாழ்வியல் நெறியாக கொண்ட சத்தியமார்க்கமாம் இஸ்லாம், உலகின் அமைதி வாழ்வுக்கு நேர்மை-நியாயமற்ற கொடும் வட்டியைப் புறக்கணித்து வட்டியற்ற கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட கட்டளையிடுகிறது.

இஸ்லாத்தின் இந்த உயரிய கோட்பாட்டைக் கடைபிடித்து, வட்டியற்ற முறையிலான பொருளாதாரத்தைக் கட்டமைத்திருந்த ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகள், சமீபத்திய கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்காமல் தலைநிமிர்ந்து நின்றதை உலகம் கண்டு கொண்டது.

இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசே வட்டியில்லா முறையிலான "இஸ்லாமிய கூட்டு வங்கி" ஒன்றை உருவாக்கியிருப்பினும் இஸ்லாத்தின் மீதான காழ்ப்பால் சுப்பிரமணிய சுவாமி அந்த வங்கியின் செயல்பாட்டுக்கு எதிராக தடையுத்தரவு வாங்கி முடக்கினார்.

"நல்லவைகளை நல்லவர்களே வரவேற்பர்!". அத்தகைய நல்லோர் பலருக்கு இன்னமும் வட்டியில்லா பொருளாதாரம் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதனுடைய அவசியம் குறித்தும் விரிவாக விளக்கப்படவில்லை. அவர்கள் அதன் நன்மைகளை அறிந்து கொண்டால், "இஸ்லாமிய வங்கிகள்" மூலம் இந்த உலகமே ஒரு பொருளாதார புரட்சியைச் சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகவே, வட்டியில்லா முறையிலான "இஸ்லாமிய பொருளாதார திட்டங்கள்" குறித்து வெளிப்படையான கலந்தாய்வுகள், விளக்கங்கள், பிரச்சாரங்கள் மிக ஆழ்ந்த திட்ட வரைவுகளோடு முன்னெடுக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இதனைச் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு, இறை மார்க்கத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்களுக்கு உண்டு.

அவ்வரிசையில், வட்டியின் தீமைகளையும், வட்டியில்லா முறையிலான இஸ்லாமிய வங்கியின் செயல்பாடுகளையும் விளக்கும் விதமாக, "உயிர்க்கொல்லி" என்ற பெயரில் குறும்படம் ஒன்றை சகோதரர் ரஃபீக் ரோமன் மற்றும் ஆர். நைனார் முஹம்மது ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இக்குறும்படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா வருகிற 11.01.2009 திங்கள் மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான கம்பர் பி. செல்வந்திரன் குறும்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டு தலைமையுரையாற்றுகின்றார். தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவி கவிஞர் சல்மா முதல் குறுந்தகடை பெற்று சிறப்புரையாற்றுகின்றார்.

வட்டி அடிப்படையிலான பொருளாதார கட்டமைப்பினால் விளையும் தீமைகளைப் பாமரர்கள் முதல் அரசுகள் வரை இன்று கண்முன்னால் கண்டுக் கையைச் சுட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், உலகின் சுபிட்ச வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்கும் வட்டியில்லா முறையான இஸ்லாமிய வங்கியியல் குறித்து விளக்கங்கள் கொடுக்க எடுக்கப்படும் இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவைகளாகும்.

மேலும் இது போன்ற முயற்சிகளை மிக ஆழமான ஆய்வுத் திட்டங்களுடன் முன்னெடுப்போம்; இவ்வுலகை வட்டி என்ற கோர அரக்கனின் பிடியிலிருந்து காப்போம்!

Source : http://www.satyamargam.com/

கங்கண சூரிய கிரகணம்

இளையான்குடி, ஜன.16: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. மிக அரிய வானியல் நிகழ்வான இந்த கிரகணத்துக்கு “கங்கண சூரிய கிரகணம்” என பெயரிட்டிருந்தனர். இந்தக் கிரகணம் இளையான்குடி பகுதிகளில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டுத் திடல்கள் போன்ற இடங்களில் நின்று கொண்டு சிறுவர்களும், இளைஞர்களும் பார்த்து ரசித்ததோடு, பெண்களும் முதியவர்களும் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர். இளையான்குடி மேலப்பள்ளிவாசல் வளாகத்தில் ஜூம்மா தொழுகைக்கு முன் சிறுவர்களும், இளைஞர்களும் கிரகணத்தைப் பார்க்கக் கூடிய விசேஷ கண்ணாடியை வைத்துப் பார்த்து மகிழ்ந்தனர். பிற்பகல் 12:30 முதல் 1:50 வரை கங்கண கிரகணம் இளையான்குடி பகுதியில் தெளிவாகத் தெரிந்தது.

Source : http://www.ilayangudi.org/